சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஜே.சி.டி பிரபாகர், "சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணியினர் கதி கலங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதை வெளிக்காட்டும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் மாவட்டத்தில் தற்போது தான் புதிய நிர்வாகிகளை நியமித்தார். இந்த நியமனத்தின் மூலம் நாமக்கல் மாவட்டமே புரண்டுவிட்டது என்பதை அது காட்டுகிறது.
கட்சியில் வெகு நாட்களாக ஓரம் கட்டப்பட்டவர்கள், புதிய நிர்வாகிகளை நோக்கி படையெடுத்துள்ளார்கள். இதனைப் பார்த்தவுடன் தங்கமணிக்கு கவலை வந்துவிட்டது. தங்கமணியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டியுள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும்பொழுது, அடுத்த முறை நீங்களே முதலமைச்சர் வேட்பாளராக நின்று கொள்ளலாம் என்று தங்கமணி ஓ.பன்னீர்செல்வத்திடம் சொன்னாரா..? இல்லையா..?.
தர்மயுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வரும் நோக்கில் அவர்கள் கொடுத்த உறுதிமொழி ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் தனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியே போதும். துணை முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த பொழுது டெல்லிக்குச் சென்றால் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அழைத்துச்செல்ல மாட்டார். அவர் மட்டும் தனியாகவே செல்வார்.
ஒருமுறை பிரதமரே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரையும் சேர்ந்து சந்திப்பதாக கூறிய பொழுதும் கூட எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக சென்று பிரதமரை சந்தித்தார். ஆனால், இதை அனைத்தையும் சகிப்புத்தன்மையுடன் ஓ.பன்னீர்செல்வம் பொறுத்துக்கொண்டிருந்தார். எந்த கேள்வியும் கேட்காமல் அனைத்து கோப்புகளிலும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டார்.
கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கு முன்பாகவே ஜூன் 14ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியது ஏன் என்று அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
கட்சி விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை யாரும் நீக்க முடியாது என்ற சட்டவிதிகள் உள்ளபோது, மாவட்டச்செயலாளர் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்துமாறு அறிவுறுத்தியது யார்? ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவிற்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் பொழுது, வைத்திலிங்கம் உணர்ச்சிவசப்பட்டது உண்மைதான்.