தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மணல் விலையைக் குறைக்க திமுக அரசே நடவடிக்கை எடு!' - ops statement on construction cost

கட்டுமானத்திற்குத் தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையைக் குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

By

Published : Feb 1, 2022, 10:39 AM IST

சென்னை:இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்டுமான பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டுவந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க ஆவன செய்யப்படும் என்று திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நியாயமான விலையில் கிடைப்பதாகத் தெரியவில்லை. மாறாக கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டே செல்கிறது.

அண்மையில் பொதுமக்கள், ஏழை எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினைச் செலுத்தி எவ்வித சிரமமுமின்றி மணலை எடுத்துச் செல்லும் வகையில் காலை 8 மணிமுதல் மாலை 2 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக, இருப்பைப் பொறுத்து, மாலை 2 மணிமுதல் 5 மணி வரை மீதமுள்ள மணல் பதிவுசெய்த லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, எளியோர்

ஒரு யூனிட் மணல் 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் செய்தி வந்தது. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டபோது வெளிச் சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ஒரு யூனிட் மணல் விலை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்து அதற்கான புதிய வழிகாட்டுதல் முறைகளை வகுத்த பிறகு, வெளிச் சந்தையில் 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த ஒரு யூனிட் மணல் விலை தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் சிலரால் 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், குவாரியிலிருந்து கட்டுமான பணி நடக்கும் இடம் வரையிலான போக்குவரத்துக் கட்டணம்தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

ஒரு யூனிட் மணல் விலை 13,600 ரூபாய் என்பது வீடு கட்டுவோர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே ஒரு சதுர அடி கட்டுவதற்கான விலை 2,500 ரூபாய் என்றிருக்கின்ற நிலையில், தற்போதைய மணல் விலையைச் சுட்டிக்காட்டி கட்டட ஒப்பந்ததாரர்கள் ஒரு சதுர அடிக்கான விலையை மேலும் உயர்த்தியுள்ளதாகவும், இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மணலின் விலையைக் குறைக்க தேவை நடவடிக்கை

ஒரு யூனிட் மணல் 1,000 ரூபாய் என்பதுடன் போக்குவரத்துச் செலவையும் சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திற்குமான ஒட்டுமொத்த விற்பனை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், எந்தெந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் எந்தெந்த குவாரிகளில் இருந்து மணல் பெறவேண்டும் என்பதை வரையறை செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற நடவடிக்கை மணல் விலையை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு நிச்சயம் உண்டு. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தக்க கவனம் செலுத்தி, வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டை எளிமையான முறையில் முழுமையாகத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details