சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்த ஓ.பி.எஸ் அலுவலகத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஈபிஎஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு தரப்பினரால் அளிக்கப்பட்ட 4 தனித்தனிப் புகார்கள் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில் 4 ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் இருமுறை நேரடியாக விசாரணை நடத்தினர்.