சென்னை: இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"விநாயகப் பெருமானின் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தி அன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்குப் பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருள்களைப் படைத்து, அறுகம் புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து விநாயக பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்.
வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தி திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "வினை தீர்க்கும் விநாயகப் பெருமான், ஞான முதல்வன் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளில் அனைத்து மக்களும் வளமும், நலமும் பெற்று நினைத்த காரியங்களில் வெற்றிப் பெற்று அன்பும், அமைதியும் பெருகிட என் இனிய #விநாயகர்சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'கணபதி பப்பா மோர்யா' - ராம்நாத், மோடி வாழ்த்து