சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர், அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டுமென அதிமுக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான அணியே உண்மையான அதிமுகவாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வேறு ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதிமுக தலைவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளனர்.