சென்னை: ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. அதில், அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. ஆகவே சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (ஜூலை 4) இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விசாரிக்க முடியாது. இதுதொடர்பாக தனி நீதிபதியைதான் அணுக வேண்டும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.