தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் - நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் - நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்
சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் - நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்

By

Published : Jul 13, 2022, 7:59 AM IST

சென்னை:அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 11 அன்று நடந்த வன்முறையைத் தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைத்து வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவுக்குத் தடை விதித்து கட்சி அலுவலகத்தை ஒப்படைக்கக் கோரியும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறி பாதுகாப்பு கோரி கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

பொதுக்குழுவுக்குத் தடைக் கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளித்தும் காவல் துறையினர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு அதிமுகவினர் 14 பேரைக் கைது செய்துள்ளனர்.

அதிமுக அலுவலகம் எனக்கு உரிமையானது:சொத்து உரிமை தொடர்பாகப் பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும். அதிமுக தலைமை அலுவலகத்தைப் பொறுத்தவரை சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. கட்சியின் தலைமை நிலைய செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளது. பொதுக்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தைச் சீல் வைத்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கோரியுள்ளார்.

இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும், சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவில் எதிர் மனுதாரராக எடப்பாடி பழனிச்சாமியை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், “எடப்பாடி பழனிச்சாமி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது உரிமையியல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது. இதுநாள் வரை எந்த நீதிமன்றமும் தன்னை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றோ, எடப்பாடி பழனிச்சாமியைப் பொதுச்செயலாளர் என்றோ அறிவிக்கவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா சட்டப்பூர்வமான உரிமைகளும் உள்ளது. கட்சித் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போது அது எங்கள் கட்டுப்பாட்டிலிருந்தது.

அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாக பொது அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லாமல், முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வருவாய்க் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார். இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வர உள்ளன.

இதையும் படிங்க:இபிஎஸ் குறித்து பொன்னையன் - நாஞ்சில் கோலப்பனிடம் பேசியதாக வைரலாகும் ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details