அதிமுக கூட்டம்: யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு! - எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு
15:21 June 14
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை கொறடா மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடைபெற்றது. பகல் 12.30 மணிக்கு தொடங்கி மாலை நான்கு மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், சுமார் 60-க்கும் மேற்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டப்பேரவை கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இதற்கான அறிவிப்பை அதிமுக அறிக்கையாக வெளியிட்டது. அதில், கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் : ஓ. பன்னீர்செல்வம்
- கொறடா - எஸ்.பி. வேலுமணி
- துணை கொறடா - சு . ரவி
- பொருளாளர் - கடம்பூர் சி ராஜூ
- செயலாளர் - கே.பி. அன்பழகன்
- துணைச் செயலாளர் - பி.எச். மனோஜ் பாண்டியன்
TAGGED:
அதிமுக