அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய அரசின் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,
” மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல், குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் சர்வாதிகாரமாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்கள், வேளாண் விளை பொருட்களை வரம்பின்றி பதுக்க வழி செய்கிறது. இவற்றின் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பதுக்குதல் தாராளமயமாக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசாயிக்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும், வேளாண் முன்னேற்றத்திற்குப் பின்னடைவை தரக்கூடியதும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு புறம்பானதுமான இம்மூன்று சட்டத் திருத்தங்களும், கடும் கண்டனத்திற்குறியது. மேலும், மாநிலங்களவையின் விதிகளை மீறி இவற்றை நிறைவேற்றியிருக்கும் மத்திய பாஜக அரசுக்கும், அவற்றை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கும், வன்மையான கண்டனத்தை இக்கூட்டம் தெரிவித்து கொள்கிறது.
விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டத்தின் மூலம், 5 ஆண்டுகள் வரைகூட கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளுடன் பண்ணை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்; அதை நீட்டித்துக் கொள்ளலாம்; எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் போன்ற பிரிவுகள் அனைத்தும், குறு, சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.