சென்னை: 2021ஆம் ஆண்டின் உலக நீரிழிவு தினம் இன்று ( நவ.14) அனுசரிக்கப்படுகிறது. நீரிழிவு சிகிச்சைக்கான அணுகுவசதியை மேம்படுத்துவது என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாக இருக்கிறது.
விழித்திரை அழிவு நோய்
இந்நிலையில், இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளுள் சராசரியாக 30 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு பார்வை திறனிழப்புக்கு வழிவகுக்கக்கூடிய நீரிழிவு சார்ந்த ’விழித்திரை அழிவு நோய்’ ஏற்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்வது, சிறியதாக இருப்பினும் பார்வைத்திறன் பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுப்பது போன்றவற்றால் நீரிழிவு நோயாளிகள் இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும்.
மருத்துவர் அறிவுரை
இந்நிலையில், ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் எடையைக் குறைப்பது, சமச்சீரான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்றவை நீரிழிவு நோயாளிகள் அவர்களது பார்வைத்திறனை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்வதில் பெரும் பங்காற்றும் என டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, பொது கண் மருத்துவவியலின் முதுநிலை ஆலோசகரும் கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவருமான திரிவேணி தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய மருத்துவர் திரிவேணி, ”நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு, கண்களில் ரத்த நாளங்களில் இயல்புக்கு மாறான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உள்ளார்ந்த ரத்தக்கசிவு, திரவ சுரப்பையை அடைப்பதன் வழியாக பார்வைத்திறன் பாதிக்கிறது. அது விழித்திரையையும் கண் நரம்புகளையும் சேதப்படுத்துகிறது, சில நேரங்களில் விழித்திரையையே இடம்பெயரச் செய்கிறது.
32% நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை அழிவு நோய்
2020ஆம் ஆண்டில் நீரிழிவு நிலையில் கண் கோளாறுகளின் தொகுப்பு (SPEED) என்ற ஒரு சமீபத்திய ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளுள் சுமார் 32 விழுக்காடு நபர்களுக்கு நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் இருக்கிறது. இந்தியாவில் 80 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதால், இதன்படி 25 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் இருக்க வேண்டும்.
எனினும், நீரிழிவு நோயாளிகளுள் பெரும்பான்மையானவர்கள் கண் பரிசோதனைகளுக்கு செல்வதில்லை. இதயம் அல்லது சிறுநீரகத்தை பாதிப்பதைப் போல கண்களையும் நீரிழிவு பாதிக்கும் என்ற விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. ஆரம்ப நிலையில் விழித்திரை அழிவு நோயில் அதற்கான அறிகுறிகள் தென்படாமல் இருக்கக்கூடும்.
அறிகுறிகள், சிகிச்சை
நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு பாதிப்பு ஏற்படும்போது, மங்கலான பார்வை, இருட்டான திட்டுகள் அல்லது சரம் மிதப்பது போன்றவை அறிகுறிகளுள் சிலவாக இருக்கக்கூடும். இவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிடில் நிரந்தர பார்வைத் திறனிழப்புக்கு இது வழிவகுக்கும். விழித்திரை, விழித்திரையின் மையப்பகுதி மீதான ஒரு விரிவான கண் பரிசோதனையின் வழியாக நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் இருப்பதைக் கண்டறிய இயலும்.
லேசர் அறுவை சிகிச்சை, கசிவுள்ள ரத்த நாளங்களை அடைத்தல், கண் அழற்சியைக் குறைக்க கண்களுக்குள் ஊசி மூலம் மருந்துகளை செலுத்துதல், கண்களின் பின்புறத்தில் ஜெல் போன்ற திரவத்தை அகற்றவும், மாற்றவும் அல்லது விழித்திரை விலகி இருப்பதை சரி செய்வதற்கான அறுவை செயல்முறை, ஆகியவை விழித்திரை அழிவு நோய்க்கான சிகிச்சை முறைகளாக இருக்கின்றன” என்றார்.
இதையும் படிங்க:உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாற்றம்: மறு பரிசீலனை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை