நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 12 ஆயிரம் காவல்துறையினர் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ‘ஆபரேஷன் நம்பர் பிளேட்’ என்ற ஒரு அதிரடி ஆபரேஷனை தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மோகன் பேட்டி இந்த வாகன நிறுத்தத்தில், கேட்பாரற்று நீண்ட நாட்களாக இருக்கும் இருசக்கர வாகனங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள். மேலும், இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ அவற்றின் பதிவு எண் சரியாக இருக்கிறதா அல்லது போலியான பதிவு எண்ணா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். அப்போது குற்ற நடவடிக்கைகள் அல்லது குற்றச்செயல்களில் உள்ள வாகனங்கள் இருந்தால், அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சார்பில் தெரிவிக்கப்படும்.
சென்னையை பொறுத்தவரை சென்ட்ரல், எழும்பூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய முக்கியமான ரயில் நிலையங்களிலிருந்து கிட்டத்தட்ட 228 கேட்பாரற்ற வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு இருப்பது இந்த ஆபரேஷன் மூலம் தெரியவந்தது. தற்போது அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.