தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆபரேசன் கஞ்சா வேட்டை - 2ஆயிரம் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கம்! - தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகள் 2 ஆயிரம் பேருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

ஆபரேசன் கஞ்சா வேட்டை
ஆபரேசன் கஞ்சா வேட்டை

By

Published : Oct 4, 2022, 7:36 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகளின் 2 ஆயிரம் பேருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த 50 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் மற்றும் பணம் ஆகியவற்றையும் முடக்கியுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கேற்ப, சில இடங்களில் கல்லூரி விடுதிகளிலும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர கடந்தாண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டாலும் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனையானது தொடர்ந்தது.

அதன்காரணமாக போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களால் பல்வேறு இடங்களில் குற்றச்செயல்களும் அதிகரிக்கத்தொடங்கியதால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்க, தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க, காவல் துறையினருக்கு உத்தரவிட்டது. அதன்படி, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடக்க காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அதன்பின்பாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சோதனை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது. மேலும் கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு இருக்கும் காவல்துறை அலுவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி கடுமையாக எச்சரித்து இருந்தார்.

அதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானார்கள். பலர் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கஞ்சா வியாபாரிகளுக்கு சொந்தமான 2000 வங்கிக் கணக்குகளை தமிழ்நாடு காவல்துறையினர் முடக்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2 ஆயிரம் பேருடைய வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கஞ்சா விற்பனை மூலமாக சம்பாதித்த சொத்துகள் என 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும், பணத்தையும் முடக்கியுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பூண்டு மூட்டைகளுக்குக்கீழ் பதுக்கி வைத்திருந்த 1.15 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details