சென்னை:2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் ஏற்பட்ட கரோனா தொற்று வைரஸ் பாதிப்பு, தற்போதுவரை உலக மக்களை வாட்டிவதைத்துவருகிறது. இதன் காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறை முதல் அடிமட்ட வியாபாரிகள் வரை நேரடி அணுகுதலைத் தவிர்த்து ஆன்லைன் மூலமாகவே தங்கள் வணிகத்தை மாற்றத் தொடங்கியுள்ளனர்.
இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதிமன்றங்களையும் கரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. கரோனா முதல் அலையில் தொடங்கிய பாதிப்பு நீதிபதிகள், கடைநிலை ஊழியர்கள் வரை அதிகரிக்கத் தொடங்கியது.
ஓராண்டில் ஒன்றரை கோடி மரங்கள் அழிப்பு
இதையடுத்து, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலன்கருதி நீதிமன்ற விசாரணைகள் 2020ஆம் ஆண்டுமுதல் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டுவருகின்றன. கரோனா தொற்று குறையத் தொடங்கியதும் நேரடி விசாரணைகள் நடத்த பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதும் பாதிப்புகள் முழுமையாகக் குறையாததால், தற்போதுவரை ஆன்லைன் விசாரணையே தொடர்கிறது.
இதற்குத் தீர்வுதான் என்ன? இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் விசாரணைகளும், வழக்கறிஞர்களும் பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் விசாரணைதான் ஒரே தீர்வாக அமையுமா? என்பதைக் காலம்தான் முடிவுசெய்ய வேண்டும்.
பொதுவாக நீதிமன்ற வழக்குகளுக்கான ஆவணங்களைத் தாக்கல்செய்ய வெள்ளை, பச்சை நிறத் தாள்கள் தேவைப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தாள்கள் தயாரிப்பதற்காக 15 மில்லியன் டன் (ஒரு கோடியே 50 லட்சம்) மரங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு தாளைத் தயாரிக்க 10 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.
ஆன்லைன் விசாரணை நடைமுறையில் சாத்தியமா?
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க உயர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்களில் தாள் இல்லாத மனு தாக்கல் முறையைக் கொண்டுவர வேண்டும் என உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நடைமுறையில் உள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் இ-பைலிங் முறை ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே மனு தாக்கல்செய்யும் முறையிலிருந்து இ-பைலிங் முறைக்கு மாறுவது படிப்படியாகத்தான் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு நான்கு மில்லியன் (40 லட்சம்) டன் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும். ஆனால், ஆன்லைன் விசாரணை என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆன்லைன் விசாரணை நிரந்தரத் தீர்வாகுமா?
இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறுகையில், "கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நேரடி விசாரணை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால் இதே நிலை தொடர்ந்தால், வழக்கறிஞர்களால் தொழில்செய்ய முடியாத நிலை ஏற்படும். கரோனாவைக் காரணம் காட்டி முழுவதுமாக நேரடி விசாரணையைத் தவிர்க்காமல், தொற்று இல்லை எனச் சான்றளிக்கப்பட்டவர்களை மட்டும் நீதிமன்றத்திற்கு வர அனுமதிக்கலாம்.
இதனால், இளம் வழக்கறிஞர்கள் எந்தப் பொருளாதாரத் தடையுமின்றி நீதிமன்றங்களில் வழக்காட முடியும். மேலும், ஆன்லைன் விசாரணை என்பது தற்காலிகத் தீர்வாக அமையுமே தவிர, நீதிமன்றங்களைப் பொறுத்தவரை நிரந்தரத் தீர்வாக அமையாது. அதனால், விரைவில் நேரடி விசாரணையைத் தொடர நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.