தமிழ்நாட்டில் கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாகக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதில், ஒரு மாணவர் ஒரே விண்ணப்பம் மூலம் விரும்பும் கல்லூரிகள், பாடங்களைத் தேர்வு செய்யத் தேர்வு செய்து கொள்ள முடிந்தது.
விண்ணப்பித்த கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாடவாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்குப் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடப்பிரிவில் மாணவர்கள் நேரடியாகக் கல்லூரியில் வந்து சேர்ந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாகச் செயல்பட்ட 27 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளையும் சேர்ந்து நடப்பாண்டு இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கையை, அரசு கல்லூரியில் பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளவேண்டும். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களையும் இணையதளம் மூலம் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பம் தொடக்கம் - கேரளா பல்கலைக்கழகம் அறிவிப்பு