நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை ரூ. 80ஐ தாண்டியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை
பொருத்தவரை வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ. 50ஆக உள்ளது.
வெங்காயம் அதிக அளவு விளைவிக்கப்படும் பகுதிகளான மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் எதிரொலியாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரத்தில் 30 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை தற்போது 50 ரூபாயை தொட்டுள்ளது. இருப்பினும் இனி வரும் நாட்களில் இதன் விலை படிப்படியாக குறைந்து 40 ரூபாயை தொடுமென கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மக்கள் அன்றாடம் தங்கள் சமையலில் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை உயர்ந்து இருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பொதுவாக புரட்டாசி மாதத்தை ஒட்டி ஏராளமான மக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பதால் காய்கறிகள் விலை உயரும். ஆனால் தற்பொழுது வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.