தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கண்ணில் நீர் வழிய.... நெஞ்சில் காயம் ஏற்படுத்திய வெங்காயம்! - வெங்காயத்தின் விலை

சென்னை: வெங்காயத்தின் விலை சில நாள்களாக அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அது குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பைக் காணலாம்.

onion price hike special coverage
வெங்காய விலை சிறப்புப் பார்வை

By

Published : Dec 6, 2019, 8:29 PM IST

வெங்காயம் என்பது மனிதர்கள் உணவு முறைகளில் மிகப்பெரிய பங்காற்றிவருகிறது. பல ஆண்டுகளாக வெங்காய விலையேற்றத்தையும் வீழ்ச்சியையும் மக்கள் சந்தித்துவருகின்ரனர். இதன் விலையேற்றம் என்பது சாதாரணமாக பார்க்கக் கூடிய காரியமில்லை. இதனை ஒன்றியிருக்கும் அனைத்து உணவுகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தும்.

வெங்காயம் படுத்தும் பாடு!

தற்போதைய அசுர விலையேற்றத்தால், நடுத்தர மக்கள் வெங்காயத்தை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், பெரிய வெங்காயம் கிலோவுக்கு அதிகபட்சமாக 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

'நான் அதிகமாக வெங்காயம் சாப்பிட மாட்டேன்' -நிர்மலா சீதாராமன்

மொத்த விலை சந்தையிலே இந்த விலை விற்பனை செய்யப்படுவதால் நகரின் மற்ற பகுதிகளில் இருக்கும் சில்லறை விற்பனை கடைகளில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகமாக உள்ளது. இதனால் வெகுதூரத்தில் உள்ள மக்களும் கோயம்பேடு சந்தைக்கு வந்து மொத்தமாக வெங்காயத்தைச் வாங்கிச் செல்கின்றனர்.

இல்லத்தரசிகளின் புலம்பல்!

இது தொடர்பாக பேசிய இல்லத்தரசி புவனேஸ்வரி, "30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது 150 விற்பனை செய்யப்பட்டால் நடுத்தர மக்கள் எப்படி சமையல் செய்து வாழ்வது. வசதியுள்ளவர்கள் மட்டுமே வெங்காயத்தை வாங்க முடிகிறது" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

பட்ரோட்டைச் சேர்ந்த சோனியா, வெங்காயம் வாங்குவதற்காக கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வந்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தங்கத்தைக்கூட வாங்கிவிடலாம், ஆனால் வெங்காயத்தை வாங்க முடியவில்லை. முன்பெல்லாம் குழம்புக்கு நான்கு வெங்காயம் போடுவோம். இப்போது ஒரு வெங்காயமாக குறைத்துவிட்டோம். பட்ரோடு பகுதியிலிருந்து வெங்காயம் வாங்க கோயம்பேடு வந்துள்ளோம்.

இங்கு 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வெங்காயம் அங்கு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச் சந்தைகளிலும் சில்லறை விற்பனை கடைகளிலும் இரண்டு மடங்கு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை வாங்கி சமைக்கக்கூட இரண்டு வெங்காயம் தேவைப்படுகிறது, அது இல்லாமல் என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பினார்.

வெங்காய விலையேற்றம் குறித்து வாடிக்கையாளர்கள்

வெங்காய விலை உயர்வால் தாங்கள் உட்கொள்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக பெரும்பான்மையான மக்கள் கூறுகின்றனர்.

உணவகங்களில் எப்படி?

இந்தப் பிரச்னை சென்னையில் உள்ள உணவகங்களிலும் எதிரொலித்துள்ளது. கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் பேசுகையில், "முன்பு நாள் ஒன்றுக்கு 15 கிலோ வெங்காயம் பயன்படுத்துவோம், தற்போது ஏழு கிலோதான் பயன்படுத்துகிறோம். அசைவ உணவில் வெங்காயத்திற்கு பதிலாக தேங்காயை பயன்படுத்துகிறோம். வெங்காய விலை உயர்வால் நாளொன்றுக்கு 500 இழப்பு ஏற்படுகிறது. 90 முதல் 120 ரூபாய் கொடுத்து வாங்கும் வெங்காயத்திலும் 10 கிலோவுக்கு ஒரு கிலோ அழுகிய நிலையில் உள்ளது" என்று கவலை தெரிவித்தார்.

ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால், ஒரு பிரியாணி இலவசம்!

ஓரளவுக்குமேல் சாப்பாட்டின் விலையை உயர்த்த முடியாததால் இழப்பைத் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக உணவங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், கோயம்பேடு சந்தையில் வேறு காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளது. தக்காளி, உருளைக் கிழங்கு கிலோ 30 ரூபாய்க்கும் பீன்ஸ் 50 ரூபாய்க்கும் கேரட் 60 ரூபாய்க்கும் கத்திரிக்காய் 20 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றன.

வெங்காய விலையேற்றம் குறித்து உணவக உரிமையாளர்கள்

வியாபாரிகளின் நிலை என்ன?

கோயம்பேடு சந்தை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு வெங்காய வியாபாரம் செய்யும் வியாபாரி ராஜேந்திரன், "கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக சுமார் 1000 லாரிகளில் வெங்காயம் வரும், தற்போது 30 லாரிகள்தான் வருகின்றன. வெங்காயம் அதிகம் விளையும் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் வரத்து குறைந்துள்ளது. தற்போது பெங்களூரு, ஆந்திர மாநிலத்திலிருந்து வெங்காயம் வருகிறது. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை. வெங்காயத்தின் விலை குறைய மூன்று மாதம் வரை ஆகும்" என்றார்.

செஞ்சூரி அடித்த வெங்காயத்தின் விலை - பொதுமக்கள் அவதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெரும்பாலான வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தே வரும் நிலையில் அந்தப் பகுதிகளில் சென்ற ஆண்டு ஏற்பட்ட வறட்சி, சமீபத்தில் ஏற்பட்ட எதிர்பாராத மழை வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக வெங்காயப் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக 10 முதல் 15 லட்சம் ஹெக்டேர் வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. டிசம்பர் மாதத்துடன் சந்தைக்கு வரவேண்டிய புதிய வெங்கயம் வராததால், ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கான் சந்தையில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

வெங்காய விலையேற்றம் குறித்து வியாபாரிகள்

தீர்வைத் தேடி...

வெங்காய விலை நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை, மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வெங்காயத்தினை சேமிக்கும் அளவையும் வெகுவாக குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கை பலனளிக்காது என்று கூறுகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் முகுந்தா பிங்லே.

நீயா... நானா...? - தங்கத்தை உரசிப்பார்க்கும் வெங்காயம்!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "மொத்தச் சந்தைக்கு வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தாலேயே வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது, பதுக்கலால் அல்ல. இந்த நேரத்தில் வியாபாரிகளில் கையிருப்பைக் குறைக்கும் நடவடிக்கை பலனளிக்காது" என்று கூறுகிறார்.

இது தவிர வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் அத்தியாவசிய காயான வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலையைக் குறைக்க அரசு துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details