சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் பீலா ராஜேஷ் மாநில அளவிலான அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநில அளவில் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 45 வயதான ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 28ஆம் தேதி மஸ்கட்டில் இருந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் வெப்பப் பரிசோதனை செய்தனர்.
இரு தினங்களுக்கு முன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப்பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அனைத்தும் போதுமான அளவில் இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை.
பொதுமக்கள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்வதுடன், தேவையற்ற போக்குவரத்தையும் தவிர்க்க வேண்டும். 60 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 59 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.
15 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இவரது ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு நோய்த்தொற்று உறுதியானவரின் குடும்பத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். அவருடன் பயணம் செய்த மற்றவர் குறித்த விபரங்களையும் பெற்று மக்கள் நல்வாழ்வுத்துறை கண்காணித்து வருகிறது. பொது மக்கள் முகக்கவசம் அணிவது என்பது தேவையற்றது. தொற்று தாக்கியவர் இருமினால் வரும் எச்சில் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்தால் மட்டுமே மற்றவர்களைத் தாக்கும். காற்றில் கலந்து பரவாது.
ரத்தப்பரிசோதனை மேற்கொள்ள தேனியில் ஒரு பரிசோதனை மையம் அமைக்கவும், மேலும் கூடுதலாக தேவைப்படும் இடங்களில் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று தொற்றானது முதலில் தெரியாவிட்டாலும் 14 நாள்கள் கழித்து ஏற்பட வாய்ப்புள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கத்தாரிலிருந்து சென்னை திரும்பிய சிறுவனுக்கு கொரோனா?