பள்ளிக்கல்வித்துறையில் கடந்து 2019 ஆம் ஆண்டு 814 கணிப்பொறி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 26 ஆயிரத்து 882 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு 2019 ஜூன் மாதம் ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 3 மையங்களில் இணையதள சேவை கிடைக்காமல் தேர்வு தடைபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் செல்ஃபோன் எடுத்து வர அனுமதி அளித்ததாகவும், 3 மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி, தேர்வு பட்டியலை ரத்து செய்து மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.