இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வடகிழக்கு பருவமழை தொடங்குவது முன்கூட்டியே தெரிந்தும், முதலமைச்சர் பழனிசாமியின் அலட்சியத்தால், ஒரு நாள் மழையை கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு ’டிசம்பர் 2015’ வெள்ள அபாயத்தை சந்திக்க போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வடிகால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரி சீரமைக்க 750 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியும், அதில் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையும், சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் பிரிவும் இது குறித்து விசாரிக்க முன்வரவில்லை. விளைவு, அமைச்சர் வேலுமணியின் ஊழலுக்கு அதிகாரிகள் அனைவரும் துணை போய், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை கோட்டை விட்டுள்ளனர்.
கரோனாவோ, டிசம்பர் 2015 வெள்ளமோ, இந்த கனமழையோ எதையுமே எதிர்கொள்ளும் அடிப்படை அருகதையை அதிமுக அரசு இழந்து நிற்கிறது. வானிலை மையம் எச்சரித்தும், ஒவ்வொரு பணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி அதை செலவிடாமலேயே சுருட்டுவது எப்படி என்ற ஊழல் கலையின் ஊற்றாக அதிமுக அரசு இருப்பதால், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ஊழல் நாயகனாக வலம் வருகிறார்.