தமிழ்நாடு

tamil nadu

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் - எல். முருகன் சொன்ன யோசனை!

By

Published : Jun 28, 2021, 1:02 PM IST

Updated : Jun 28, 2021, 5:23 PM IST

தமிழ்நாட்டில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தால் ஒன்றிய அரசையும் விலை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவோம் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர்
பாஜக மாநிலத் தலைவர்

கரோனா தொற்று பொதுமுடக்கத்தின் காரணமாகத் தமிழ்நாட்டில் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தொற்று குறைந்தவுடன் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் வாழ்க தமிழகம்!'

கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்கின்றனர். மேலும் தேங்காய், பூ போன்ற பூஜை பொருள்கள் எதற்கும் கோயிலுக்குள் அனுமதி இல்லை. இந்த நிலையில் எல். முருகன் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், 'ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் வாழ்க தமிழகம்!' எனத் தொடங்கிய எல். முருகன், "கரோனா தொற்று இன்னும் குறையவில்லை. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

மாநில அரசே வெள்ளை அறிக்கை வெளியிடுக

மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தடுப்பூசி தந்துள்ளது என்பதையும், எவ்வளவு தடுப்பூசிகள் பயன்படுத்தி உள்ளனர் என்ற விவரத்தையும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே 28 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து தடுப்பூசியினை வழங்கிவருகிறது" என்றார்.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்துக் கொண்டால் நாங்கள் ஒன்றிய அரசிடம் விலையைக் குறைக்க வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை’ - மா. சுப்பிரமணியன்

Last Updated : Jun 28, 2021, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details