சென்னை: 2020ஆம் ஆண்டு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்தி, சாதி, மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மதக் கலவரத்தைத் தூண்டும்படியான பதிவுகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகவும் கூறி முகமது இக்பால் (எ) செந்தில் குமார் என்பவரை மதுரை திடீர் நகர் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா சட்டம்) உள்ளிட்ட 10 சட்டப்பிரிவுகளின்கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், முகமது இக்பால் (எ) செந்தில் குமார் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், பாவா பஹ்ருதீன் (எ) மண்ணை பாவா உள்ளிட்டோருடன் இணைந்து பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.
மேலும், மண்ணை பாவா தலைமையில் மதுரை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரகசியக் கூட்டங்கள் நடத்தி தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கி சமூக வலைதள கணக்குகள் மூலமாகப் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து இவ்வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு இவ்வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.