சென்னை: அதிகரித்துவரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில் வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்ல, அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. தொற்றுப் பரவலைக் குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், தனியார் பேருந்துகளில் 90 விழுக்காடு இரவு நேரங்களில்தான் மக்கள் பயணம் செய்பவர்கள் என்றும், இந்த நேரத்தில் போக்குவரத்தைத் தடைசெய்தால் தங்களது தொழில் முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
முற்றிலுமாகத் தொழில் பாதிப்படையும்
இது தொடர்பாக பேசிய அனைத்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், "கரோனா தொற்றால் ஏற்கெனவே தொழில் முடங்கியுள்ளது. 2020 மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கிவந்த நிலையில், முதல் ஊரடங்குக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 650 பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தன.
தொற்று மீண்டும் அதிகரிப்பதாகக் கூறி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்பு பயணங்கள் படிப்படியாகக் குறைந்துவருகின்றன. நேற்று முன்தினம் வெறும் 180 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பயணம் முழுமையாக நின்றுவிடும். இதற்கு மேல் இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
காலையில் பேருந்துகளை இயக்க இயலாது
பொதுவாக மக்கள் இரவு நேரங்களில்தான் பயணம் செய்வர். இந்தக் கட்டுப்பாடுகளால் முற்றிலுமாக தனியார் பேருந்துகள் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளுக்கு மட்டுமே பகல் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொலைவிலுள்ள பகுதிகளுக்கு இரவு நேரத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்க முடியும். கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு பகல் நேரத்தில் பேருந்துகளை இயக்க முடியாது.
அவ்வாறு பகலில் பேருந்துகளை இயக்கினாலும் மக்கள் யாரும் வர மாட்டார்கள். இதனால் தொலைதூரப் பேருந்து சேவையை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம். இந்தப் புதிய கட்டுப்பாடுகள் குறித்து குழப்பம் நிலவுகிறது" என்றார்.
தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 19) காலை அரசு பிரதிநிதிகளை பேருந்து உரிமையாளர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.