கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு, மே 17ஆம் தேதி நிறைவடையும் நிலையில், அடுத்தக்கட்டமாக பொது பேருந்து சேவைகள் படிப்படியாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்த முடிவு! - ஊரடங்கு முடிவுக்கு பின் பேருந்து இயக்கம்
சென்னை: தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய காரணத்தால், ஆம்னி பேருந்து கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
மீண்டும் பேருந்துகளை இயக்கினாலும், நோய்த் தொற்றுப் பரவாத வகையில், தகுந்த இடைவெளி விட்டு பாதிளவு பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளன. இதையடுத்து, பாதி இருக்கைகள் காலியாகவே இருக்கும் என்பதால், அதற்குரிய நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக, பேருந்து கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த இருப்பதாக, தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது கிலோ மீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இதனை 3.20 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.