சென்னை: தென் ஆப்ரிக்கா நாட்டில் உருவாகியுள்ள உருமாறிய ஒமைக்ரான் வைரஸ், தற்போது சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, பிரேஸில், வங்கதேசம், போஸ்வானா, மொரீசியஸ், சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஒமைக்ரான் வைரஸை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் தடுக்க இந்திய சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து அனைத்து மாநில அரசுகளையும் தயார்படுத்தியுள்ளது.
இதனால் தமிழ்நாடு அரசு ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதில் போா்க்கால அடிப்படையில் அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி தென் ஆப்ரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து நேரடி விமானங்களிலும், விமானங்கள் மாறி மாற்று விமானங்களிலும் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வருபவர்களை அந்தந்த விமானநிலையங்களிலேயே நிறுத்தி வைத்து, RT-PCR டெஸ்ட் எடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது.
6 மணி நேரம் காத்திருக்க வேண்டும்
அதன் முடிவுகள் வரும்வரை 6 மணி நேரம் அந்தப் பயணிகளை விமான நிலையத்திலேயே தங்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதை மேற்பார்வையிடுவதற்காக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அந்தந்த விமான நிலையங்களுக்கு தனி அலுவலர்களை நியமித்துள்ளது.
இந்த ஏற்பாடுகள் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல் (நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து)அமலுக்கு வந்துள்ளது. நேற்றிரவு 11.45 மணிக்கு லண்டனிலிருந்து ஏா்இந்தியா விமானம் 298 பயணிகளுடன் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.