சென்னை அசோக்நகர் நல்லாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (68). இவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இன்று (ஜனவரி 9) பிற்பகல் அவரது மகன் லோகேஷ் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தபோது, மின்விசிறியில் வேஷ்டியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் பெருமாள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, பெருமாளை மீட்டு மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். பரிசோதனையில் பெருமாள் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குமரன் நகர் காவல்துறையினர், பெருமாளின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட முதியர் யபெருமாள் மேலும், தற்கொலை செய்துகொண்ட பெருமாளின் பாக்கெட்டில் இருந்த கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், "நான் இந்த முடிவை எடுக்க காரணம் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து குமரன் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசால் அன்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லி எல்லையில் கடந்த 46 நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.