சென்னை தண்டையார்பேட்டை, கைலாசம் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பெருமாள் (45). இவரது உறவினர் ஏழுமலை (65), கூலித் தொழில் செய்துவருகிறார்.
நேற்று மாலை ஏழுமலைக்கும், அவரது மகள் ஆனந்திக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பெருமாள் தகராறைத் தடுத்து நிறுத்த ஏழுமலையிடம் சமரசம் பேசியுள்ளார். அப்போது தன்னுடைய குடும்பத் தகராறில் தலையிட வேண்டாமென பெருமாளை ஏழுமலை கண்டித்துள்ளார். அதனைக் கேட்காமல் பெருமாள் தொடர்ந்து பஞ்சாயத்து பேசியதாகக் கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெருமாள் இதனையடுத்து, பெருமாளுக்கும், ஏழுமலைக்கும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஏழுமலை ஆத்திரத்தில் பெருமாளை வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும், பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவான ஏழுமலையை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.