அகத்தியரின் பிறந்த நாளான மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அமையும் நாள் ஒவ்வொரு ஆண்டும், “சித்த மருத்துவ திருநாளாக” கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் மூன்றாவது சித்த மருத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், தமிழிசை மற்றும் ஸ்ரீபத் யசோநாயக் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்து சித்த மருத்துவ திருநாள் சிறப்பு மலர் மற்றும் ஆய்வு புத்தகங்களை வெளியிட்டனர்.
விழாவில் தமிழிசை கூறியதாவது:
ஆரோக்கியமான தமிழகத்திற்கு ஆளுநராக மட்டுமல்லாமல் அக்காவாக வர வேண்டும் என நினைத்தேன். அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை ஆளுநர் என்று சொல்வதை விட வழக்கம்போல் அக்கா என்றே அழைக்கலாம்.
எனது சொந்த ஊரின் பெயர் அகஸ்தீஸ்வரம் என்பதால் இவ்விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் ஆங்கில மருத்துவம் படித்திருந்தாலும், சித்த மருத்துவம்தான் எனக்கு பிடித்தது.
சித்த மருத்துவம் என்பது நோயே இல்லாமல் வாழ்வதற்கானது, இளமையாக வாழ இதில் வழி இருக்கிறது. அந்தக் காலத்திலேயே ஹேர் டையை நம் முன்னோர்கள் சித்த மருத்துவ முறையில் உருவாக்கியுள்ளார்கள்.
ஆயில் கூடினால் ஆயுளுக்கு ஆபத்து: ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு நான் தெலங்கானாவில் ஆளுநர் மாளிகையில் மூலிகை தோட்டம் ஒன்றை உருவாக்கியதே எனது முதல் வேலை. யோகாவை கட்டாயமாக்கி ராஜ் பவனில் உள்ள அனைவரையும் யோகா கற்க வைத்துள்ளேன்.
பதவி ஏற்ற அடுத்த நாள் டெங்கு காய்ச்சல் செய்திகள் மனதிற்கு வேதனை அளித்தது. அதனால் அந்த அரசை அழைத்து டெங்குவை சென்னையில் கட்டுப்படுத்தும் விதம் போன்று தெலங்கானாவில் 15 தகவல்களாக அரசுக்கு சமர்ப்பித்தேன்.
அதில் நிலவேம்பு கசாயம் என்பது முக்கியமான ஒன்றாகும். தமிழர்கள் எங்கு சென்றாலும் நல்ல விஷயங்களை செல்லும் இடங்களில் அனைவரும் பயன்பட வழங்குவது வழக்கம்.
மகப்பேறு சஞ்சீவினி என்கிற கிட் ஒன்றை தமிழக அரசு வழங்குகிறது. நரேந்திர மோடி அரசாங்கம் ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாக அறிவித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளும் பின்பற்றுகின்றன. நம் பாரம்பரிய உணவுகளை நாம் மறந்துவிட்டோம். தாய்ப்பால் கொடுத்தால் இளமை கெட்டுவிடும் என தவறாக நினைக்கின்றனர்.
ஆனால் தாய்ப்பால் கொடுத்தால்தான் இளமையாக இருக்க முடியும். கசப்பு உணவு என்பது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும், சர்க்கரை நோய் வராது.
பாஸ்ட் புட், மிக்ஸ்ட் ரைஸ் (கலவை சாதம்) எனச் சாப்பிட்டுவதன் மூலம் நம் ஆயுளை நாம் குறைத்துக்கொள்கிறோம். உப்பு அதிகம் சாப்பிட்டால் சொரணை குறைந்து விடும்.
சித்த மருத்துவர்களின் ஆராய்ச்சி இன்னும் விரிவுபடுத்தப்பட்டு அது மக்களுக்கு சென்றடைய வேண்டும். இஞ்சி இடுப்பழகி ஆக வேண்டும் என்றால், இஞ்சி சாப்பிட்டாக வேண்டும்.
அதை விட்டு அமெரிக்கர்கள் எழுதிக் கொடுப்பதை நாம் பின்பற்றுகிறோம். மிகவும் அவசர நிலை காலத்தில் அதற்கான மருத்துவத்தைதான் பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவமும், ஆங்கில மருத்துவமும் இணைந்து சில நோய்களை குணப்படுத்தலாம் என்றார்.