லெபனானில் உள்ள பெய்ரூத் நகரில் சில ஆண்டுகளாக சேமித்துவைக்க வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததோடு ஒட்டுமொத்த நகரமும் பெரும் சேதத்திற்கு உள்ளானது. இந்தச் சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்த நிலையில், இந்தச் சம்பவத்தை அடியோற்றி தமிழ்நாட்டின் பிரதான நகரான சென்னையிலும் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
அதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு, கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உரிய ஆவணங்கள் இன்றி இறக்குமதி செய்தாகக் கூறி அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 37 கண்டெய்னர்களில் சென்னையில் சுங்கத்துறைக்குச் சொந்தமான மணலியில் உள்ள வேதிப்பொருள் பாதுகாப்பு கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூத் வெடி விபத்துக்குப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைப்பற்றப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என, சுங்கத்துறை அலுவலர்கள் நேற்று (ஆகஸ்ட்.5) ஆய்வில் ஈடுபட்டனர். பாதுகாப்பில் வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட்யை ஒரு சுங்கத்துறை உதவி ஆணையர் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இவை மின்னணு ஏலம் மூலமாக விற்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமோனியம் நைட்ரேட் தனித்து இருக்கும்பொழுது அவை எந்த ஒரு பேரிழப்பையும் ஏற்படுத்தாது என்றும், அவற்றோடு அலுமினியம் தூள், எரியும் எண்ணெய்கள் உள்ளிட்டவை சேர்ந்தால் மட்டுமே பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமோனியம் நைட்ரேட் கட்டுமானப் பணிகளிலும், சுரங்க பணிகளிலும் வெடி பொருட்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.