சென்னை: மெட்ரோ குடிநீர் வழங்கல் வாரியம் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் முக்கிய ஏரியான வீராணம் ஏரியிலிருந்து நீரேற்றம் செய்ய தொடங்கியுள்ள நிலையில், மெட்ரோ ஏரிகளின் நீர் மட்டம் பரவலாக உயர்ந்துள்ளது.
குடிநீர் வழங்கல் வாரியத்தின் அலுவலர்கள் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் நீரை எடுக்க தொடங்கிவிட்டனர். இதனால், வாரியத்தின் நீரியல் நிபுணர்கள் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனாலும் குடிநீர் விநியோகம் தடையின்றி சென்னைவாசிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்கிறார்கள்.
மெட்ரோ ஏரிகளின் நீர் இருப்பு
இது குறித்து மெட்ரோ வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "வீராணம் ஏரியிலிருந்து தற்போது 65 மில்லியன் லிட்டர் தினந்தோறும் நீரேற்றம் செய்யப்படுகிறது. இந்த அளவு படிப்படியாக உயர்த்தப்படும். வழக்கமாக வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் தினந்தோறும் எடுக்கப்படும்.
இதுதவிர தற்போது என்.எல்.சி, பரவனாற்றிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து 60 மில்லியன் லிட்டரும் எடுக்கப்படுகிறது. இதனால், மொத்தம் 125 மில்லியன் லிட்டர் நீர் தற்போது சென்னைக்கு கிடைக்கிறது. ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதி நீரும் கணிசமான அளவுக்கு வருவதால் அனைத்து மெட்ரோ ஏரிகளிலும் முறையான நீர் இருப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஏரிகளின் கொள்ளளவு
இது குறித்து உதவி செயற்பொறியாளர் அருணகிரி கூறுகையில், "வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆயிரத்து 468 மில்லியன் கியூபிக் அடியாகும். இது தற்போது 798 மில்லியன் கியூபிக் அடியை எட்டியுள்ளது. எனவே, சென்னை மெட்ரோ வாரியம் தமக்குரிய நீரை எடுத்துக்கொள்ளலாம் என ஏற்கெனவே தகவல் கொடுத்திருந்தோம்.