சென்னை: கொச்சின் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். குறிப்பாக 2017ஆம் ஆண்டு கேரளாவில் போடப்பட்டுள்ள ஒரு வழக்கை அடிப்படையாக வைத்து, ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு மலபுரம் மாவட்டத்திலுள்ள எடக்கர காவல் நிலையத்தில் உபா(UAPA) சட்டம் கீழ் 19 பேர் மீது வழக்கு ஒன்றை கேரள காவல்துறையினர் பதிவு செய்தனர்.
பொருளதாரத்தை சீர்குலைக்க திட்டம்
கேரள காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய மாவோயிஸ்ட்டுகள் முகாமிட்டு, கொடியேற்றம் மற்றும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டதாகவும், நீலாம்பூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு விசாரணை அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவும், தேச விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும், நாட்டில் பொருளாதார ரீதியாக சீர்குலைக்க திட்டமிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 பேர் மீது வழக்கு
இந்த வழக்கு தொடர்பாக கொச்சின் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தனிஷ், சந்தோஷ் குமார், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 12 இடங்களிலும், பெங்களூரில் 3 இடங்களிலும் கேரளாவில் 5 இடங்கள் என 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட் கும்பலுடன் தொடர்புடைய நபர்களிடத்தில், இந்த சோதனை நடைபெற்று வருவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்டிடிஇ உளவுப் பிரிவு முன்னாள் நிர்வாகி கைது
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சின் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்த எல்டிடிஇ- விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு முன்னாள் நிர்வாகி சத்குணம் என்கிற சபேசன் என்பவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் பயங்கரவாத பயிற்சி: 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!