தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.500 கோடி கிராவல் மண் விவகாரம்; விசாரணை வளையத்துக்குள் ஓபிஎஸ்? - சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.500 கோடி மதிப்பில் கிராவல் மண் எடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு உதவிய அலுவலர்கள் மீதான விசாரணை குறித்து கனிமவளத்துறை கூடுதல் செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை
விசாரணை

By

Published : Jan 20, 2022, 8:17 PM IST

சென்னை: அரசு நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த கனிமவளத் துறை அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.

உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு நிலங்களிலிருந்து அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை அவரது உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதிலளிக்க உத்தரவு

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முறைகேடு நடந்துள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலம் கையகம்

அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வருவாய்த் துறை, கனிமவளத் துறை உள்ளிட்ட அலுவலர்களும் உடந்தையாக இருந்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு ஜன.20ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தபோது, ஊழல் கண்காணிப்பு துறை சார்பில், இந்தப் புகாரில் இரண்டு துறை அலுவலர்களுக்குச் சம்பந்தம் உள்ளதாகவும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், விசாரணை அலுவலர்களுக்கு ஒப்புதல் வழங்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கனிம வளத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகக் கனிமவளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அனுமதி வழங்கியவுடன் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன் கனிமவளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வரும் பிப்.3ஆம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.4600 கோடி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details