தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 விழுக்காடு இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடர்ந்த வழக்கில் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை இடஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசே மீறுகிறது என மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. இளங்கலைப் படிப்பில் 15 விழுக்காடு இடங்களும், முதுநிலைப் படிப்பில் 50 விழுக்காடு இடங்களையும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்குகிறது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு கலந்தாய்வு நடத்திவருகிறது.
இவ்வாறு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்களில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் தவிர, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுவது கிடையாது. மற்ற அனைத்து இடங்களையும் பொது பிரிவாக அறிவித்து மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்கவேண்டிய சட்டப்பூர்வமான ஒதுக்கீடு அடிப்படையிலான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டுவருவதாகக் கூறி தமிழ்நாடு அரசு, திமுக, பாமக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமானது சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி பூங்குன்றன், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுவரையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல்செய்துள்ளார். மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
இதையும் படிங்க:500 மரங்கள் நட்டு மண்வளத்தைப் பாதுகாக்கும் ஓய்வுபெற்ற எஸ்ஐ!