இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரங்களை வெட்ட அனுமதி மறுப்பது, தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது என தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்களில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பில் இடையூறு ஏற்படுத்துகிறது. இதனை பார்க்கும்போது, கேரள அரசின் உறவு தான் முக்கியம், தமிழ்நாட்டின் உரிமை முக்கியமல்ல என்ற நிலைக்கு திமுக அரசு வந்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் உபகோட்ட அலுவலகம் உள்ளது. இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகையும் அங்கே உள்ளன. இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான சிமெண்ட் தகடுகள், சின்டெக்ஸ் தொட்டி, பிளாஸ்டிக் குழாய்கள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொண்டு சென்றபோது, தேக்கடி நுழைவுப் பகுதியில் உள்ள கேரள சோதனைச் சாவடியில் அனுமதி மறுக்கப்படுகிறது.
அலுவலகப் பராமரிப்புப் பணிக்குகூட பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று சொல்வதும், அதற்கு வனத்துறையின் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கேரள அரசின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக் காலமாக கூட்டாட்சி குறித்தும், மாநில சுயாட்சி குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். கேரள மாநிலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது மட்டுமல்லாமல், சென்ற மாத இறுதியில் சென்னை வர்த்தக மையக் கூட்டரங்கத்தில் நடைபெற்ற 'உங்களில் ஒருவன்' சுய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கேரள முதலமைச்சர் கலந்து கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்திப் பேசியிருக்கிறார். திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் நல்ல தோழமை உணர்வுடன் இருக்கின்றன.