தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிகரித்து வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகரித்து வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
அதிகரித்து வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

By

Published : Sep 24, 2022, 1:15 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ப்ளூ' காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். இருப்பினும், கள நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது.

அண்மைக் காலமாக காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை, குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தியுள்ளன. நேற்று 100 இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்ஃபுளுவென்சா எனப்படும் 'ப்ளூ' தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் ‘ப்ளூ' காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அதாவது கரோனா தொற்று அறிகுறிகளும், 'ப்ளூ', 'டெங்கு' காய்ச்சலுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், கடுமையான அறிகுறிகளுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும், வருங்காலங்களில் தற்போதுள்ள காய்ச்சல் முகாம்கள், நோய்த் தொற்று எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு மாற்றப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கள நிலைமை இவ்வாறிருக்க, அமைச்சர் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. இதேபோன்று, ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருந்தது போல் தமிழ்நாட்டிலும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டாலும், மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண்ணை அரசு அறிமுகம் செய்திருப்பதாக கூறுகிறார்.

இதில் இருந்தே மருந்து தட்டுப்பாடு நிலவுவது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாடு அளவிலும் சரி கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், செப். 20-இல் 496 ஆக இருந்த தினசரி பாதிப்பு செப். 21-இல் 509 ஆகவும் , செப்.22-இல் 522 ஆகவும், செப்.23-இல் 529 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது தவிர, செப்.23-இல் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 95% நிதி ஒதுக்கியதாக கூறினேன்’ - ஜே.பி.நட்டா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details