சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில் விடுதிக்காப்பாளர் அளித்த துன்புறுத்தலால் மனஉளைச்சல் ஏற்பட்டு களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தி ஆற்றொணா துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் எனக்கு அளித்துள்ளதோடு, தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். லாவாண்யா இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை வீட்டிற்கு அனுப்பாமல் கணக்குகளை பராமரிக்கச் சொன்னதாகவும், படிப்பதைக் காரணம் காட்டி மறுத்தால் திட்டுவார் என்றும், விடுதியில் ஏதாவது பொருள் காணாமல் போனாலும் அதற்கு தான்தான் காரணம் என்று கூறி திட்டுவார் என்றும், தன்னுடைய தற்கொலைக்கு விடுதிக் காப்பாளர்தான் காரணம் என்றும் கூறியுள்ளதாக செய்தி வந்துள்ளது.
அதே சமயத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருடைய உறவினரிடம் விசாரித்தபோது, மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக அந்த மாணவி குறிப்பிட்டதாகவும், இதற்கான வீடியோ இருப்பதாகவும் ஒருதரப்பு கூறுகிறது. ஆனால், அரசுத் தரப்போ லாவண்யாவின் தற்கொலைக்கும், மத மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் ஆதாரம் இல்லை என்று கூறுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும் லாவண்யா இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. மேற்படி சிறுமியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, லாவண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - அன்பில் மகேஷ்