சென்னை: இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், இன்று மக்களின் வாழ்வாதாரங்களைப் பற்றி கண்டு கொள்ளாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியினை கெயில் நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.
அதுதொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் 2013ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு குழாய்கள் அமைத்தால் விவசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும், எரிவாயுக் கசிவு ஏற்படும் என்றும், விவசாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அதே சமயத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது என்றும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேற்படி கருத்துக்களின் அடிப்படையில், விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டுமென்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு அந்த முடிவு சென்னை உயர் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, அங்கு கெயில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், இந்தத் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாய நிலங்கள் ஊடே எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது.