இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுாிந்து வந்த செவிலியக் கண்காணிப்பாளா் பிரசில்லா, சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் மற்றும் சில உடல் உபாதைகளுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கரோனா சோதனை எடுக்கும் முன்னரே, கரோனா சிகச்சைப்பிாிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எடுக்கப்பட்ட இரண்டு சோதனைகளிலுமே கரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. அதன்பின், பிரசில்லாவுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. அப்போதும், அவரை தீவிர சிகிச்சைப் பிாிவிற்கு மாற்றவில்லை. 27.05.2020 அன்று மாலை அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே, அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் கரோனா வாா்டிலேயே சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், இரவு 9 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி பிரசில்லா இறந்து விட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தொிவித்துள்ளது.
இந்நிலையில், பிரசில்லாவுக்கு கரோனா கண்டறிதல் சோதனைகளில் இரண்டு முறை நெகடிவ் எனத் தெரிவித்த மருத்துவமனை நிா்வாகம், அவருடைய மருத்துவ அறிக்கையில் கரோனா பாசிடிவ் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த முரண்பாடு ஏற்க முடியாததாக இருக்கிறது. எனவே, சோதிக்கும் முன்னரே ஏன் அவரை கரோனா வாா்டில் சேர்த்தார்கள் என்பது குறித்தும், உடல்நிலை மோசமடைந்தும் அவரை தீவிர சிகிச்சை பிாிவிற்கு மாற்றாதது குறித்தும் மருத்துவமனை நிா்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.