சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததில், பின்னால் வந்த லாரி ஏறியதால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையின் மையப்பகுதியில் அதிமுக நிர்வாகியால் வைக்கப்பட்டிருந்த பேனரே சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிந்தபின் பல்வேறு கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் பேனர் அடித்த அச்சகத்திற்கும் சீல்வைக்கப்பட்டது. இதுதவிர இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் காவல் துறையினருக்கு பல கேள்விகளையும் எழுப்பியது. இதைத் தொடர்ந்து அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகளும், திரையுலக பிரபலங்களும் பேனர் வைக்க வேண்டாம் என்று தங்களின் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் கோரிக்கைவிடுத்தனர்.
மேலும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சுபஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். திமுக சார்பில் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக ஸ்டாலின் அறிவித்தார்.
பின்னர் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் ஐபிசி 336 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ட்விட்டரில் ட்ரெண்டாகும் சுபஸ்ரீயின் ஹேஸ்டேக் கடந்த வாரம் சுபஸ்ரீயின் மரணத்தைத் தொடர்ந்து உயிரிழப்புக்குக் காரணம் யார் #Whokilledsubashree என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் இன்று #JusticeForSubaShree என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாக்கப்பட்டுவருகிறது. இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.