பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதிமுக சார்பில் பிறந்தநாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கிவைத்தார். ஸ்டாலினும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மாறி மாறி பொன்னாடை போர்த்திக் கொண்டனர். பின்னர் ஸ்டாலின் உரையாற்றுகையில், ”அண்ணாவின் பிறந்த நாளான இன்று, இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பங்கெடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
நான் பங்கேற்கும் முதல் மதிமுக மாநாடு இதுதான். தனித் தனி வீட்டில் இருந்தாலும் ஒரு தாய் தந்த இரு மகன்கள் நாங்கள். வேறு வேறு இயக்கமாக இருந்தாலும் கொள்கை ஒன்றுதான். திமுகவிற்கு நான் எப்படி தளபதியோ, அதுபோல நிரந்திர போர்வாள் வைகோ. கலைஞரிடம் உறுதியளித்தது போல் வைகோ திமுகவிற்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்தியா ஒரு மாதிரியாக இருந்தாலும், எப்போதும் தமிழ்நாடு தனி மாதிரியாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலாக திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றார்கள். நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை திட்டமிட்டு மத்திய அரசு வஞ்சித்துவருகிறது. கொஞ்சம் ஏமாந்தாலும், இந்தியைத் திணித்து விடுவார்கள்.
இருப்பினும், அவர்கள் இந்தியைத் திணித்துக் கொண்டிருந்தால், அதை நாங்கள் எதிர்த்துக் கொண்டே இருப்போம். போர்க்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதே பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் அன்று நாம் ஏற்க வேண்டிய உறுதி மொழியாக இருக்க வேண்டும்”, என்றார்.
பின்னர் திராவிடர் கழக தலைவர் வீரமணி சிறப்புரையாற்றுகையில், “கருணாநிதி, அண்ணா காலத்தில் இருந்த எதிரிகளைவிட இப்போது நம்முடைய எதிரிகள் மிகவும் மோசமானவர்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்று அடிக்கடி சொல்லுங்கள், அப்போதுதான் பிரிந்திருக்கும் நாங்கள் ஒன்றிணைவோம்”, என்றார்.