தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 30, 2019, 10:56 PM IST

ETV Bharat / city

நவம்பர் 1 தமிழ் வளர்ச்சி நாள் - கம்யூனிஸ்ட் கட்சி!

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநிலம் உதயமான தினமாக கொண்டாடவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்நாளை தமிழ் வளர்ச்சி நாளாக கடைப்பிக்குமாம்.

நவம்பர் 1 தமிழ் வளர்ச்சி நாள் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம் உதயமான தினம். இந்த நாளை தமிழ் வளர்ச்சி நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாட முடிவு செய்துள்ளது. அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சியை முன்னிறுத்தி கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. விடுதலைப் போராட்ட காலத்திலேயே மொழிவழி மாகாணங்கள் என்ற கோரிக்கை முன்னுக்கு வந்தது. இதை முன்னெடுத்துச் சென்றதில் கம்யூனிஸ்டுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

நாடு விடுதலை பெற்ற பிறகு மொழிவழி மாகாணம் அமைக்க மறுத்த நிலையில், மொழிவழி மாநிலங்கள் அமைவதுதான் தேசிய இனங்களின் தனித்தன்மையை பாதுகாக்கவும், அனைத்து மொழிகளும் சமச்சீரான வளர்ச்சி அடையவும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவும் பொருத்தமாக இருக்கும் என்று அழுத்தமாக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இப்போராட்டங்களில் தடியடிகளையும், தாக்குதல்களையும், வழக்குகளையும் சந்தித்தவர்கள்.

மாநில மறுசீரமைப்பு கமிஷனில் இதற்காக நாடு முழுவதும் கோரிக்கை மனுக்களை அளித்தது கம்யூனிஸ்ட் கட்சி. இந்தப் பின்னணியில்தான் 1956ஆம் ஆண்டு மொழிவழி மாநில அடிப்படையில் சென்னை மாகாணம் உதயமானது. சென்னை மாகாணம் அமைக்கப்பட்ட பின்னரும் அதற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட மறுத்துவிட்ட நிலையில், இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான திருத்த மசோதாவை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.ராமமூர்த்தி. இத்தகைய போராட்டத்திற்கு பின்னரே 1969ஆம் ஆண்டு அண்ணா அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தோழர் பி.ராமமூர்த்தி

ஆனால், இன்றைக்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மொழிவழி மாநிலங்கள் என்ற கட்டமைப்பை சிதைத்து வருகிறது. அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட மத்திய அரசு, அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பலவீனமான மாநில அரசுகள் என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. கல்வி, சுகாதாரம், நிதிஆதாரம் என அனைத்திலும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்படுகின்றன. அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக மாற்றுவதற்கு பதிலாக, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் வம்படியாக திணிக்கப்படுகின்றன.

தமிழ்மொழியின் தொன்மைக்கு கீழடி போன்ற அகழாய்வுகள் சாட்சி சொல்கின்றன. அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழை அரியணை ஏற்றவும், மொழிவழி மாநில கட்டமைப்பு பாதுகாக்கப்படவும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை பெறவும், பயிற்று மொழி மற்றும் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள விரிவானதொரு பிரச்சார இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details