உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி, உயிர்பலி ஏற்படுத்தியுள்ளதால், முக்கிய வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதேபோல பிற மாநில உயர் நீதிமன்றங்களும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இச்சூழலில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சந்தித்து, அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில், மூத்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுப்பையா, சத்தியநாராயணன், கிருபாகரன், சுந்தரேஷ், சிவஞானம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார்.