சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்று முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு அவசர வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு நீதிபதிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில், மே மாத விடுமுறையை ஒத்தி வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்களும் முழுவீச்சில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கறிஞர் சங்கங்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு எழுதிய கடிதத்தில், கீழமை நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க கோரிக்கை வைத்திருந்தனர்.