காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சென்னை உயர்நீதமன்றத்தில் ‘நோட்டா’ குறித்த வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அதில், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்காக நோட்டா கொண்டு வரப்பட்டது.
தேர்தல் ஆணையம் நோட்டா குறித்து முழுமையான விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தவில்லை. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றாலும் ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு தங்களுடைய வாக்குகளை செலுத்த மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலில், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர தூதர் யாரையும் நியமிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் கூட நோட்டா குறித்த விபரங்கள் மாநில மொழிகளில் இடம்பெறவில்லை.
நோட்டா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. எனவே நோட்டா குறித்து விழிப்புணர்வை அதிகமாக விளம்பரப்படுத்த வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணைய தரப்பில், நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களைத் தாக்கல் செய்தனர்.