“அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதை தொடக்கத்திலிருந்தே திமுக வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர்களை காப்பாற்ற முயன்றது அதிமுக அரசு. இடைவிடாத போராட்டத்தின் காரணமாக, திருநாவுக்கரசு என்பவரைக் கைது செய்து, அவரை மட்டும் பலிகடாவாக்கி, ஆளுந்தரப்பை காப்பாற்ற எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், உண்மைகளை மறைக்க முடியவில்லை.
அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் தொடர்புடைய, ‘பார்‘ நாகராஜன் போன்ற அதிமுக நிர்வாகிகளுக்கு, இந்தக் கொடூர பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட பார் நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை அக்கறை காட்டினர். எடப்பாடியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு இந்த லட்சணத்தில்தான் உள்ளது.
முழுக்க முழுக்க அதிமுக மேலிடத்தின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட இந்த பாலியல் கொடூரத்தை மூடி மறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி திசை திருப்பும் வேலையிலும் அதிமுக அரசும், அதன் காவல்துறையும் செயல்பட்டதை திமுக தொடர்ந்து எதிர்த்து போராடி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு, பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை சிபிஐ இன்று கைது செய்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.