சென்னை: தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில், (செப்.13) நடந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பது, தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்காத வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்வது, எந்தெந்த பகுதியில் கடந்த காலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியதோ அந்த பகுதிகளுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி பணிகளை வேகப்படுத்துவது குறித்தும், தமிழகத்தின் மழை, புயல் பாதிப்புகள் குறித்து விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தலைமை செயலாளர் இறையன்பு, 'பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சமீப காலங்களில் ஆறுகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் பேரிடர் தொடர்பான வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்படி பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
மேலும், குறைந்த நேரத்தில் ஏற்படும் அதிகபட்ச மழைப் பொழிவு காரணமாக மழைநீர் தேங்குதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்தல் போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வண்ணம் வானிலை குறித்த முன்கணிப்பு தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், பொதுமக்கள் தங்கள் பயண திட்டங்களை வரையறுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால் வாகன நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் இயல்பாக தங்கள் பயணங்களை மேற்கொள்ளமுடியும். இதற்கான தகவல் பரிமாற்ற வசதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.
பேரிடர்காலங்களில் பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏதுவாக மேற்படி மையங்களை நல்ல முறையில் பராமரித்து தயார் நிலையில் வைத்து, வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் போதுமான உணவு பொட்டலங்கள் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய ஏதுவாக தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
பேரிடர் காலங்களில் ஏற்படும் சாலை சேதங்களை உடனுக்குடன் செப்பனிட்டு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்திட வேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபடும் வண்ணம் தங்களது வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க முப்படை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார்.