சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் காலியாகும் பணியிடங்களுக்கு கரோனா காலத்திலும் தகுதியான நபர்களை தேர்வு செய்ய குழுக்களை அமைத்து சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகளை நிர்ணயம் செய்தும், சத்துணவுப் பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும், சத்துணவு மையங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு சமையல் உதவியாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சத்துணவு அமைப்பாளர்கள் 60 வயதிலும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் 58 வயதிலும் பணியில் இருந்து வயது முதிர்வினால் ஓய்வு பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சத்துணவு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், சத்துணவுப் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவது அசியமாகும்.
ஆனாலும் கரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்களை அழைத்து நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டியது கட்டாயமாகிறது.
இச்சூழலில் 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள விதிமுறைகள், கல்வித் தகுதி, அறிவுரைகள் அடிப்படையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய (சென்னை மாவட்டம் நீங்கலாக) தேர்வுக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வுக்குழு ஒன்றுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாச்சியர், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினராகவும் இருப்பார்கள்.
தேர்வுக்குழு 2க்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(ஊரக வளர்ச்சி) தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாச்சியர், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினராகவும் இருப்பார்கள். தேர்வுக்குழு ஒன்றுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாச்சியர், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினராகவும் இருப்பார்கள்” என அதில் கூறப்பட்டிருந்தது.