தமிழ்நாட்டில் பாலைவன வெட்டுக்கிளிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ”வடமாநிலங்களை தற்போது தாக்கி வரும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளது. இது தமிழ்நாட்டிற்கு வருமா என்பது குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கத்தை நமக்கு அளித்துள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பிகார் போன்ற தெற்கிந்திய பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வின் அடிப்படையில் கூறப்படுகிறது. பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழ்நாடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வந்தவை, உள்ளூர் வெட்டுக்கிளிகள்தான் என்று தெரிய வந்துள்ளது.