சென்னை: நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாடைகளையும், புது பொருட்களையும் வாங்க தி நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, பாண்டி பஜார் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ள இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் இருப்பவர்கள் மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கூட புது ஆடைகள், நகைகள் வாங்குவதற்காக தியாகராய நகர் பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
ரங்கநாதன் தெருவில் வழக்கமாக காணப்படும் கூட்டத்தை விட அதிகமான கூட்டம் காணப்படுகிறது. பாதுகாப்பு பணிக்காக மாநகராட்சி அலுவலர்களும், காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் கடை வீதி குறிப்பாக காவல் துறையினர் ஆங்காங்கே முகாம்களும், உயர் கோப்புரங்கள் அமைத்து ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, பாதுக்காப்பு நெறிமுறைகளை கூறி வருகின்றனர்.
மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.
சென்னை தியாகராய நகர் கடை வீதி கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்த சூழ்நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் திரண்டு துணிகள், பொருட்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சில மேலை நாடுகளில், குறைந்திருந்த கரோனா தொற்று தளர்வுகளை அடுத்து மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இது ஒரு பொருட்டாக கூட கருதாமல், பொதுமக்கள் இவ்வாறு கூட்டமாக கிளம்புவது, கரோனா தொற்று அபாயத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை சமிஞ்சை விடுத்துள்ளனர்.
சென்னை தி நகரில் கூடிய மக்கள் அரசு அலட்சியமாக இல்லாமல், கரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த சேலைகள்' - விற்பனை ஜோர்!