தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்னியருக்கான இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்!

வன்னியர் இடஒதுக்கீட்டுக்குத் தடையில்லை
வன்னியர் இடஒதுக்கீட்டுக்குத் தடையில்லை

By

Published : Jul 28, 2021, 2:35 PM IST

Updated : Jul 28, 2021, 4:57 PM IST

14:32 July 28

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை:எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, வன்னியர் சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது.

எத்தனை வழக்குகள்? 

இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. 

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், விளிம்புநிலை சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகளின் விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டன.

அரசாணை வெளியீடு

இதைத் தொடர்ந்து, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, வன்னியருக்கான 10.5 விழுக்காடு, சீர்மரப்பினருக்கு 7.5 விழுக்காடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 விழுக்காடு என்ற இட ஒதுக்கீட்டினை நடப்பாண்டிலேயே அமல்படுத்தவதற்கான அரசாணையை நேற்று முன்தினம் (ஜூலை 26) வெளியிட்டது.

அவசர விசாரணை

இதனால், இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை அவசர விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து தமிழ்நாடு அரசிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் வழக்கறிஞர்,"இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசை பதிலளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என விளக்கமளித்தார்.

உயர் நீதிமன்றம் மறுப்பு

அப்போது, வன்னியருக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு வழங்கும் அரசாணையை தடை செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வன்னியர் உள் ஒதுக்கீடு: காலையில் அறிக்கை; இரவு அரசாணை - மகிழ்ச்சியில் ராமதாஸ்!

Last Updated : Jul 28, 2021, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details