மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.
அரசு கடுமையான சூழலை எதிர்கொண்டு, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்திவருகிறது. அதிகமான சோதனை செய்வதால், அதிகமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 25 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கரோனாவைக் கையாளுவதில் அரசு திணறுகிறது என்ற வார்த்தையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் தவறானது.
பரிசோதனைகள் அதிகமாகச் செய்தால்தான் நோய்த்தொற்று இருப்பவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் வருவதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். கரோனா சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் அரசு மறைக்கவில்லை.
சென்னையைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 85 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால்தான் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து, சரியான சிகிச்சை மேற்கொண்டு-வருவதால்தான் தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைத்திருக்கிறது.
இதைத்தவிர அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்திவருகிறோம். படுக்கைகளை அதிகரித்துக்கொண்டே வருகிறோம். இதில் எதிர்மறையான கருத்துக்கும், விவாதத்துக்கும் இடம் இல்லை. இது அரசியல் செய்வதற்கு களமும் அல்ல, தளமும் அல்ல.
இதனால் எதிலும் தாமதமும், தடையும் இல்லை. மேலும் பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவுறுத்தும் வழிக்காட்டுதல்படி, முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்” என்றார்.